236. அருள்மிகு வில்வநாதேஸ்வரர் கோயில்
இறைவன் வில்வநாதேஸ்வரர், வல்லநாதேஸ்வரர்
இறைவி வல்லம்பிகை
தீர்த்தம் கௌரி தீர்த்தம், நீவா நதி
தல விருட்சம் வில்வ மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருவல்லம், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருவலம்' என்று அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து காட்பாடி செல்லும் இரயில் பாதையில் உள்ள திருவலம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வேலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்துவாச்சாரி கடந்து இடதுபுறம் திரும்பும் சாலையில் மொத்தம் 18 கி.மீ. தொலைவு சென்று கோயிலை அடையலாம்.
தலச்சிறப்பு

முற்காலத்தில் வில்வ வனம் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் மூலவர் 'வில்வநாதேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். வல்லம் என்ற பகுதி தமிழகத்தில் பல இடங்களில் உள்ளதால் சேக்கிழார் பெருமான், தீக்காலி என்ற பக்தர் இத்தலத்து இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததால் 'தீக்காலி வல்லம்' என்று வேறுபடுத்திக் காட்டுகின்றார்.

Thiruvalam Amman Thiruvalam Moolavarமூலவர் 'வில்வநாதேஸ்வரர்', 'வல்லநாதேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'வல்லாம்பிகை', 'ஸ்ரீதனு மத்யாம்பாள்' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், பெருமாள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர், சகஸ்ரலிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சூரியன், பாதாளேஸ்வரர் என்னும் ஜலகண்டேஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

கஞ்சன் எனும் அசுரனை அழிக்கச் செல்வதற்காக நந்தி தேவர் திரும்பிய நிலையில் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலில் மௌன சுவாமிகள் மடம் ஒன்று உள்ளது. சுவாமிகள் கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார். அவர் கோணியை ஆடையாக அணிந்ததால் 'கோணி சாமியார்' என்றும் அழைக்கப்படுகிறார். இவரது சமாதியும் அங்கே உள்ளது.

கோயிலுக்கு உள்ளே கௌரி தீர்த்தமும், கோயிலுக்கு வெளியே நீவா நதியும் உள்ளது.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com